பேர்ணாம்பட்டில் புதருக்குள் புகுந்த 8 அடி மலைப்பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: பேர்ணாம்பட்டில் தனியார் காலணி தொழிற்சாலை குடோனில் புகுந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பங்களாமேடு பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது இந்த தொழிற்சாலை செயல்படவில்லை.
இந்த நிலையில், இந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான குடோனை ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கும் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு, அருகில் இருக்கும் மோர்தனா விரிவு காப்புக்காட்டு பகுதியில் பத்திரமாக விட்டனர். செயல்படாத தனியார் காலணி தொழிற்சாலை குடோனில் எட்டு அடி நீள உள்ள மலைப்பாம்பு பிடிபட்டது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.