ஊருக்குள் புகுந்து அட்டகாசம் : 6 பேரை கொன்ற இரண்டு காட்டு யானைகள் பிடிபட்டன!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: தருமபுரி மாவட்டத்தில் மூன்று பேரையும், கிருஷ்ணகிரியில் ஒருவரையும், மல்லானூரில் இரண்டு பேர் என மொத்தம் 6 பேரைக் கொன்ற இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி இன்று (மே 18) பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊருக்குள் சுற்றி வந்த இரண்டு காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டன. தனியார் பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த இந்த இரண்டு காட்டு யானைகளுக்கு வனத்துறை மருத்துவர்கள் கலைவாணன், விஜயராகவன், பிரகாஷ் ,ராஜேஷ் ஆகியோர் மயக்க ஊசி செலுத்தினர்.
இரண்டு யானைகளையும் கும்கி யானைகள் சின்னத்தம்பி, உதயன், வில்சன் ஆகியவற்றின் உதவியுடன் லாரியில் ஏற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த இரண்டு யானைகளும் தகரகுப்பம், தண்ணீர்ப் பந்தல், கரடிகுட்டை பகுதிகளில் முன்னதாக முகாமிட்டு இருந்தன.
இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் பகுதியில் உஷா மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரை இந்த இரண்டு யானைகளும் மிதித்துக் கொன்றன. கோடைக் காலத்தின் தாக்கத்தினால் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியதோடு 6 பேரை கொன்ற இந்த இரண்டு யானைகளைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர்.
இதனிடையே, இந்த இரண்டு யானைகளையும் பிடிக்க முடியாமலும், குடியிருப்பு பகுதியிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமலும் வனத்துறையினர் திணறி வந்த நிலையில் இன்று மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு கும்கி யானைகள் மூலம் லாரியில் ஏற்றும் பணி தொடங்கி உள்ளது.