10ம் வகுப்பு தேர்வில் அபாரம்: மாணவிகளை முதல்வர் இருக்கையில் அமர வைத்த பள்ளி நிர்வாகம்! - மாணவிகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இன்று (மே 19) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 91.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.66 சதவீதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16 சதவீதமாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 86.31 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
6,063 மாணவர்கள் மற்றும் 5,993 மாணவிகள் என மொத்தம் 12,056 பேர் தேர்வு எழுதினர். இதில் 5,022 மாணவர்களும், 5,383 மாணவிகளும் என மொத்தம் 10,405 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 82.83%, மாணவிகள் 89.82% தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 86.31% ஆகும்.
மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை 2 அரசுப் பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 29 மெட்ரிக் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிக தேர்ச்சியைப் பெற்றுள்ளது. தனியார் பள்ளி (மேகனா இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) மாணவி ஹர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தையும், ஜெயஸ்ரீ 492 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் இனிப்பு வழங்கிப் பாராட்டினர். பள்ளி முதல்வர் பார்த்திபன் பள்ளிக்கு பெருமை தேடி தந்த இரண்டு மாணவிகளையும் அழைத்துச் சென்று முதல்வர் நாற்காலியில் அமர வைத்து கவுரவித்தார். மாணவிகளுக்கு கற்பித்த ஆசிரியைகள், உணர்ச்சி வசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் சிந்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஹர்ஷினி கூறுகையில், "பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியால் தான் இந்த மதிப்பெண்களை, என்னால் எடுக்க முடிந்தது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் ஆவதே எனது லட்சியம்" என்றார்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 90.93% மாணவர்கள் தேர்ச்சி..