பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு புதிய தார் சாலை! விரைவில் மினி பேருந்து இயக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் உறுதி!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அணைக்கட்டு அருகே முத்துகுமரன் மலை முதல் பீஞ்சமந்தை மலை கிராமம் வரை ரூ.5.11 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை திறப்பு விழா இன்று (ஜூலை 24) நடைபெற்றது. இதனை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிதி மின்சாரம் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் மா மதிவேந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
பீஞ்சமந்தை மலை கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பாலாம்பட்டு மற்றும் ஜார்தான் கொல்லை ஆகிய ஊராட்சிகளைச் சார்ந்த 794 பயனாளிகளுக்கு 10 கோடியே 3 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசின் நல்ல திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள்
இந்த சாலை பயன்படுத்தி விரைவாக சென்று வர பயனுள்ளவையாக அமைந்துள்ளது.
மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு வனத்துறையினர், அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். பீஞ்சமந்தை மலை கிராமத்தில் விரைவில் மினி பேருந்து இயக்கவும், செல்போன் டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்
மேலும், மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.