Namakkal: காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்; பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் - பேருந்தில் ஏறி ஓட்டுநர் நடத்துநர் மீது தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி ஜூலை 3-ஆம் தேதி இரவு தனியார் பேருந்து ஒன்று சென்றது. பேருந்து நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது கார் ஒன்று பேருந்தை முந்தி செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது காருக்கு பேருந்து வழி விடாததைக் கண்டு, ஆத்திரம் அடைந்த காரில் சென்றவர்கள் பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நாமக்கல்லுக்குச் சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு சென்றுள்ளது. பேருந்து வளையப்பட்டி அருகே சென்றபோது 10 பேர் கொண்ட கும்பல் 2 கார்களில் வந்து பேருந்தின் முன்பு நிறுத்தி, தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் பேருந்தினுள் ஏறி நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் தகராறு செய்து அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பேருந்தின் முன்புறக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மோகனூர் போலீசார் தகராறில் ஈடுபட்ட பரளியைச் சேர்ந்த தங்கவேல், அரூரை சேர்ந்த சரவணன், வளையப்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார், பாச்சலை சேர்ந்த அருள்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் 2 கார்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர். இதனிடையே காருக்கு வழிவிடாததால், பேருந்தில் ஏறி ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.