சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2ம் நாள் கூட்டத்தொடர் இன்று துவங்கியது; இதில், மறைந்த சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு 2025 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 7) காலை 9.30 மணியளவில் துவங்கியது.
அப்போது, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவை உறுப்பினர்கள அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடருக்கு நேற்று போலவே, இன்றும் அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடனான பேட்ஜை அணிந்து வந்திருந்தனர்.
இதையும் படிங்க: 'எமர்ஜென்சியை நினைவூட்டுகிறது, இது நல்லதல்ல' - ஆளுநர் ரவி காட்டம்..!
முன்னதாக, நேற்று நடந்த முதல் கூட்டத்தொடரின் துவக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு தயாரித்த உரையை வாசிக்காமல், அவையை புறக்கணிக்கும் வகையில் சென்றார். அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முடித்த பின்னர் தேசிய கீதம் பாடப்படாதது தான் காரணம் என ராஜ்பவன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.