கோவையில் ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி.. அப்பேட் வந்தாச்சு! - andrea music concert in coimbatore
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-06-2023/640-480-18772524-thumbnail-16x9-andreya.jpg)
கோவையில் ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி பாடகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும், ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, அரண்மனை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் ரெட்நூல் நிறுவனத்தின் சார்பில் இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் ஆண்ட்ரியா இசைக் கச்சேரி நடைபெறுகிறது. வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் இந்த இசைக் கச்சேரி குறித்து ஆண்ட்ரியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கோலாலம்பூரில்தான் கடைசியாக என்னுடைய இசைக் கச்சேரி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வருகிற 1ஆம் தேதி கோவையில் இசைக் கச்சேரி நடைபெறுகிறது. இந்த கச்சேரி 2 மணி நேரம் நடைபெறுகிறது. இளையராஜா பாடல்களும், நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் இடம் பெறுகின்றன. மேலும், கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர். கோவையில் ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்துகிறோம்.
நடிப்பு, பாடல் எதுவுமே ஈசி இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நான் பாட கற்றுக் கொள்ள வகுப்புக்கு சென்றதால்தான் தற்போது சுலபமாக பாடுகிறேன். நான் கோவைக்கு பாடல் பாடத்தான் வருகிறேன். பெண்களை திட்டுவது போன்ற பாடல்களை நான் கேட்க மாட்டேன் மற்றும் பாடவும் மாட்டேன்.
மற்றவர்கள் இது போன்ற பாடல்கள் பாடினால், நான் அது குறித்து யோசிப்பதே இல்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை” என தெரிவித்தார். இந்த இசைக் கச்சேரிக்கு 250, 500, 1000 மற்றும் 1500 ரூபாய் என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் புக் மை ஷோ (Book my show) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகிய தளங்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.