கோவிட் -19 நோயாளிகளிடம் சில வகை சைட்டோகைன்கள் (cytokine) அதிக அளவு காணப்படுகின்றன. இது கரோனா வைரசுக்கு எதிராக உடலில் நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதைத் தடுக்கக்கூடும் என்று சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த சிவ் பிள்ளை, "சிறந்த ஆன்டிபாடிகளை உருவாக்க இரண்டு வெவ்வேறு வகையான நோய் எதிர்ப்பு செல்கள் ஒருங்கிணையும். கோவிட் -19 நோயாளிகளில் இந்த குறைந்த தரமான நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவு உள்ளது என்பதை இந்த ஆய்வில் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார்.
இந்த ஆய்வுக்காக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக முக்கிய உடல் பாகங்களாக இருக்கும் இரல் பகுதிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த உறுப்புகளில் உள்ள பி செல்கள், ஆன்டிபாடிகளை உருவாக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். இவைதான் நீண்ட கால "நினைவக" செல்கள் ஆக முதிர்ச்சியடைகின்றன.
அதாவது பின்நாள்களில் நமது உடலை அதே வைரஸ் தாக்குமானால், எந்த வகையான ஆன்டிபாடி தேவை என்பது இங்குதான் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த செயல்முறையுடன் நாம் செலுத்தும் தடுப்பு மருந்துகளும் சேரும்போது, நமது நோயெதிர்ப்பு மண்டலம் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிராக சிறந்த ஆன்டிபாடிகளை உருவாக்கும் பி உயிரணுக்களை உருவாக்கும். இந்த பி செல்கள் போதிய அளவு இல்லை என்றால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நமது உடலால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது.
கோவிட் -19 நோயாளிகளில், இந்த பி செல்கள் சரியான அளவு உற்பத்தியாவதில்லை என்பதை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது கரோனா நோயாளிகளின் உடலில் சைட்டோகைன் அதிகளவு இருப்பதால், அவை பி செல்கள் உற்பத்தி ஆவதை தடுக்கின்றன.
இது குறித்து சிவ் பிள்ளை மேலும் கூறுகையில், "ஆன்டிபாடிகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு மட்டுமே மக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்கக்கூடும் என்று எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. கரோனாவில் இருந்து மீண்டு வரும் ஒரு நபர் ஆறு மாத்திற்கு பின் மீண்டும் தொற்றுநோய்க்கு ஆளாகக்கூடும். ஏன், இதேபோல பல முறை கூட பாதிக்கப்படலாம். எதிர்ப்பு சக்தியை வளர்ப்பது மிகவும் கடினம்" என்றார்.
மேலும், தடுப்பூசிகள் மூலம் நமது உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்திக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அதாவது கரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டால், அவை நீண்ட காலம் பலனிக்கலாம்.
உலகெங்கும் தற்போது வரை 2 கோடியே 31 லட்சத்து 41 ஆயிரத்து 122 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு லட்சத்து மூன்று ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஹேங் ஓவரை ஆயுர்வேத முறையில் சமாளிப்பது எப்படி?