தூக்கம் என்பது உடல், மன ஓய்வைப் பற்றியது மட்டுமின்றி முழு உடலும் ஒய்வை எடுத்துக் கொள்ளும் நேரமிது. வாரம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை, என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது மிகவும் தேவையானது என்பதே மறந்துவிட்டது. தூங்கமுடிவது நற்பேறு என்றாகிவிட்டது. 30 முதல் 40 விழுக்காடு மக்கள் வேலைப்பளுவின் காரணமாகத் தூக்கம் வருவதில்லை.
தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் மனத்தின் குழப்பமான நிலையே இதற்கான முக்கியக் காரணம். உடல் உபாதை, காலநிலையின் கடுமையான தாக்குதல், சூழ்நிலை, தீராத உடல் நலக்கேடு ஆகியவற்றால் தூக்கமின்மை உண்டாகலாம். மேலும் வேலைப்பளு, மனக்கவலைகள்கூட காரணமாகலாம். செரிமான கோளாறு, மலச்சிக்கல், வேளை தவறிய உணவுப்பழக்கங்கள் உள்ளவர்களும் தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் நல்ல தூக்கமே மன அமைதிக்கும் சக்திவாய்ந்த உடலுக்கும் மிக முக்கியம்.
ஆயுர்வேதத்தில் தூக்கமின்மையை 'அநித்ரா ' என்கிறார்கள். உடலின் சக்தி மையங்களின் சமன்பாட்டிற்கு முக்கியமானதாகக் கருதுவது மூலிகை வைத்தியமும் முறையான உணவு பழக்கங்களும் நெறியான வாழ்க்கை முறையுமே ஆகும். அதைத்தவிர மனதை தளர்வடையச்செய்வது இந்தச் சிகிச்சை முறையின் ஓர் முக்கிய அங்கமாகும்.
தூக்கமின்மைக்கு ஆயுர்வேதத்தில் என்னதான் தீர்வு?
தூக்கமின்மை குறித்து ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பது குறித்து ஹைதராபாத்தின் ஏஎம்டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர் ராஜ்யலட்சுமி மாதவமிடம் கேட்டோம்.
“தூக்கம் என்பது உணவு, தண்ணீர், காற்று போன்று உடலுக்கு முக்கியமான ஒரு உயிரியல் செயல்முறையாகும். இது உடலுக்கு மிக அவசியமாகும். தூக்கத்தின்போதுதான் நம் உடல் ஒரு உடற்கூறியல் நிலைக்குள் நுழைகிறது. இதன்மூலம் உடல் திசுக்கள் மீட்டெடுக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆரோக்கியமான தூக்கத்தை காலம், தரம், பொருத்தமான நேரம் கொண்டு அளவிட முடியும்" என்கிறார் மருத்துவர் ராஜ்யலட்சுமி.
ஒவ்வொரு மனிதனுக்கும், போதுமான அளவு தூக்கமாக 7 லிருந்து 9 மணிநேர தூக்கமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
எதனால் தூக்க வரவில்லை?
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டிருக்கும் வேலையில், மற்றவைகளை காட்டிலும் தூக்கமின்மை நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடும். “நம் உடலில் சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் உற்பத்தி உள்ளது. நாம் வைரஸ், பாக்டீரியா அல்லது நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படுகிறோம். சைட்டோகைன்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது தூக்கமின்மை காரணமாக தடைபடும். மேலும், தூக்கம் போதுமானதாக இல்லாவிட்டால் டி-செல்கள் அல்லது ஃபைட்டர் செல்கள் (தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும்) செயல்பாடு பலவீனமடைகிறது” என்கிறார் மருத்துவர்.
சரி நல்ல தூக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
- பகலில் உறங்குவதைத் தவிருங்கள். இருப்பினும், மனச்சோர்வு, வயதானவர்கள், பலவீனமானவர்கள் பகல் நேரத்தில் தூங்கலாம்.
- பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருங்கள். தியானா, பிராணயாமா, யோகா போன்றவற்றைச் செய்யுங்கள்.
- ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
- தூங்குவதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் லேசான இரவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
- படுக்கையறை, படுக்கை வசதியாக இருக்க வேண்டும். அறை இருண்ட, அமைதியான, குளிர்ச்சியானதாக இருக்க வேண்டும்.
- மசாஜ் எண்ணெய்களை நெற்றியில் ஊற்றுவதால் மன அழுத்தம், பதற்றம் நீங்குகிறது. இது தூக்கத்தையும் மேம்படுத்துகிறது.
- அஸ்வகந்தா, ஜடமான்சி, யஸ்தி மது, பிராமி, ஜதிபால், சங்கப் பூ உள்ளிட்டவை மூளைக்கு ஒரு நல்ல மருந்து. இவையெல்லாம் இயற்கையின் மயக்க மருந்து. அவை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.
- நல்ல வாசனையை முகர்வது, இனிமையான இசையைக் கேட்பது, மனதை அமைதியாக வைத்திருத்தல், கவலைப்படாமல் வாழ்வது இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் எள் எண்ணெய்யை வைத்து பாத மசாஜ் செய்தால், தூக்கம் நன்றாக வரும்.
- சீரான நிலையில் இருக்கும் தண்ணீரில் குளிப்பது, படுக்கைக்குச் செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன் பால் எடுத்துக் கொள்வது தூக்கத்தைத் தூண்டுகிறது.
- படுக்கைக்குச் செல்வதற்கு முன் 2 மணி நேரத்திற்கு முன் (குறைந்தபட்சம் 1 மணிநேரமாவது) இணைய பயன்பாட்டை குறைக்கவும்.
தூக்கமின்மைக்காக மாத்திரை, மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து, வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றுவது நல்லது. ஒரு சிறந்த தூக்கம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும், நிதானமான மனநிலையையும் உறுதிசெய்யும். இது தற்போதைய காலத்திற்கு மிகவும் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க...மனச்சோர்விலிருந்து மீள மருத்துவரின் ஆலோசனை என்ன தெரியுமா?