சென்னை: நம்மில் பலர் இனிப்பு பிரியர்களாக இருக்கும் பட்சத்தில், சொத்தைப்பல் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த சொத்தைப்பல் காரணமாக ஏற்படும் வலியைத் தாங்க முடியாமல் பலர் அவதிப்படுவதையும் பார்த்திருப்போம். இந்த சொத்தைப்பல் எப்படி வருகிறது, அதற்கான காரணம் என்ன மற்றும் இதன் வலியைக் கட்டுப்படுத்த என்னென்ன செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சாக்லெட், இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்டவற்றை உட்கொண்டு விட்டு வாயை சரிவர சுத்தம் செய்யாமலும், தண்ணீரை வாயில் வைத்துக் கொப்பளிக்காமலும் இருப்பார்கள். இதன் காரணமாக பற்கள் மற்றும் பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளைச் சேதப்படுத்தும் கிருமிகள் உருவாகி கொஞ்சம், கொஞ்சமாகப் பற்களில் சொத்தை ஏற்படுத்தும்.
இதைக் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால், அந்த சொத்தைப் பற்களின் வேர்களுக்குள் சென்று பெரும் பிரச்னைகளுக்கு வழிவகை செய்து விடும். இதனால் சொத்தைப் பல் இருந்தால் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டு தீர்வு காண்பது சிறந்தது. இதனை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து பல்வலியைக் கட்டுப்படுத்துவது எப்படி எனப் பார்க்கலாம்.
- மூன்று பல் பூண்டு மற்றும் அதனுடன் இரண்டு கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டையும் ஒன்றாக வைத்து அரைத்து மென்மையாக்கி சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வையுங்கள். இவற்றில் உள்ள அல்லிசின் போன்ற பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் பண்பு சற்று நேரத்தில் வலியைக் குறைக்க உதவுகின்றன.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதை நன்றாகக் கொதிக்க வைத்து மாற்றிக் கொள்ளுங்கள். அந்த சூடான நீரில் ஒரு பிடி புதினா இலைகளைப் போட்டு சுமார் 20 நிமிடம் வரை மூடி வையுங்கள். அந்த புதினாவில் இருக்கும் பண்புகள் தண்ணீரில் கலந்த பிறகு, அந்த தண்ணீரைக் கொண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 3 முதல் 5 முறை வாய் கொப்பளியுங்கள். இது உங்கள் சொத்தைப்பல்லில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றவும், அது பற்களை மேலும் சொத்தை ஆக்கும் சூழலைக் குறைக்கவும் உதவும்.
- அதேபோல, கடைகளில் கிடைக்கும் tea bag-ஐ வாங்கி சூடான நீரில் போட்டு நல்ல வெதுவெதுப்பாக இருக்கும் அந்த tea bag-ஐ சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வையுங்கள். இது அந்நேரத்தில் நல்ல வலி நிவாரணியாகச் செயல்படும்.
- கற்றாழை கூழ் தோல் பராமரிப்பு, உடல் சூட்டைத் தணிப்பது, அழகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், பலருக்கும் இது சொத்தைப்பல் பிரச்னைக்குச் சிறந்த தீர்வாக அமையும் என்பது தெரியாது. இந்த கற்றாழை கூழ் எடுத்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்து சற்று மசாஜ் செய்து கொடுக்கவும். இதை நீங்கள் தொடர்ந்து அடிக்கடி செய்து வரும்போது, இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பற்சிதைவை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிப்பது மட்டும் இன்றி, அந்த பாக்டீரியாக்கள் அடுத்த பற்களைச் சேதம் செய்வதையும் கட்டுப்படுத்தும்.
- வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பைச் சேர்த்து சுமார் 30 நிமிடங்கள் வரை வாய் கொப்பளியுங்கள். இதை நாள் ஒன்றுக்குப் பல முறை செய்யலாம். இதனால் உங்கள் பற்களுக்கு இடையே சிக்கி இருக்கும் உணவுப் பொருட்கள் அகற்றப்படுவது மட்டும் இன்றி, பாக்டீரியாக்களும் அழிக்கப்படும்.
இதையும் படிங்க: உடல் எடையைக் குறைக்க சிரமப்படுகிறீர்களா? அப்போ இதைத் தெரிந்துகொள்ளுங்கள்!