சென்னை: உணவும், உறக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதை நீங்கள் அனுபவப்பூர்வமாக கவனித்ததுண்டா? ஒரு நீண்ட நாளுக்கு பின் இரவு நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் பால், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகள் அன்றைய நாளையே முழுமைபடுத்துவது மட்டுமல்லாமல், நல்ல உறக்கத்தையும் தந்திருக்கும். இது போன்ற உணவுப் பழக்கம் உள்ளவர்கள் நன்றாக தூங்குவதையும் பார்த்திருப்போம். போதுமான தூக்கம் இல்லாததால் பல உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
தூக்கம் எவ்வாறு ஏற்படுகிறது: தூக்கமானது நமது மூளையில் உள்ள மெலடோனின் எனும் வேதிப்பொருளால் ஏற்படக்கூடியது. இந்த மெலடோனின் வெளியீடு சரியாக இல்லாததால் தான் தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகிறது. இது மனச்சோர்வு, எரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.
தூக்கமின்மை ஏற்பட காரணங்கள்?
வேலை திட்டம்: உங்களின் தூக்க மேலாண்மையை சில நேரங்களில் உங்களின் பணி அட்டவணை அதிகம் பாதிக்கும். அலுவலகம் செல்வோருக்கு பொதுவாக ஷிப்ட்கள் போடப்படும். இந்த ஷிப்டுகள் மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒரு முறையோ மாறும் சூழல் ஏற்படும். ஒரு வாரம் அதிகாலையிலும், மற்றொரு வாரம் இரவு நேரங்களிலும் ஷிப்ட் போடப்படும் இதனால் உங்கள் தூக்க சுழற்சி மாறுபடும். அடிக்கடி இந்த சுழற்சி மாறுவதால் தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம்: மன அழுத்தம் தூக்கமின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். வேலை, உடல்நலம், பள்ளி, குடும்பம் அல்லது நிதி என எதுவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் உங்கள் மனதை இரவு முழுவதும் விழித்திருக்க செய்யும். இதனால் இரவு முழுவதும் நீங்கள் நன்றாக தூங்குவது கடினம்.
இரவில் அதிக உணவு எடுத்துக் கொள்வது: இரவில் குறைவான அளவில் உணவு எடுத்துக் கொள்வது நல்லது. தூங்க செல்வதற்கு முன் அதிகமாக சாப்பிடுவதால் படுக்கும் போது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இரவில் அதிக உணவை உட்கொள்வது நெஞ்செரிச்சல் மற்றும் அமில வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது உங்களை இரவு முழுவதும் விழித்திருக்க வைக்கும்.
எப்படி சரி செய்வது?
சில உணவு பழக்கங்கள் இந்த தூக்கமின்மை பிரச்னையை சரி செய்ய உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவுத் தேர்வுகள் சரியாக இருப்பது அவசியம். உங்கள் தினசரி உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு மருத்துவர் அல்லது உணவியல் நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
கிவி பழம்: கிவி அல்லது கிவி ப்ரூட் ஒரு சிறிய, ஓவல் வடிவ பழமாகும், பச்சை கிவிகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கிவி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின்கள் சி மற்றும் ஈ அத்துடன் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளது.
இதனால் கிவி சாப்பிடுவது தூக்கத்தை மேம்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இரண்டு கிவிகளை சாப்பிட்டவர்கள், அவர்கள் வேகமாக தூங்குவதையும், அதிகமாக தூங்குவதையும் ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்தனர்.
நட்ஸ்: பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா மற்றும் முந்திரி போன்ற கொட்டைகள் பெரும்பாலும் தூக்கத்திற்கு நல்ல உணவாக கருதப்படுகிறது. இந்த வகை உணவுகளில் மெலடோனின் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. அவை உடல் செயல்முறைகளில் அதிக பங்களிக்கிறது. இவற்றின் கலவையானது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு அதிகம் உதவுகிறது.
ஆய்வு என்ன சொல்கிறது?:
உலகில் பல ஆராய்ச்சிகளில் பால், ஓட்ஸ், முட்டை, வால்நட்ஸ், கிவி சாப்பிடுபவர்கள் அதிகம் தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பதால் தூக்கமின்மை பிரச்சனையை சமாளிக்கலாம். இந்த வகையான உணவு தூக்கமின்மை பிரச்னைகளை சரி செய்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகிறது.