இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு விற்பனைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகளை தடை செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சிவகாசி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலட்டுக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, 'தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மகிழ்ச்சியானதாக மாற்ற சிவகாசியில் உள்ள தொழிலாளர்கள் வருடத்தின் அனைத்து நாட்களும் வேலை செய்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி மக்கள் வாழ்வாதாரத்தை காக்க உதவ வேண்டும்.
கரோனா தொற்று காரணமாக பட்டாசு உற்பத்தி தொழில்துறை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் வரவிருக்கும் பண்டிகை காலத்தின் மூலம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை மீட்டு கொண்டுவர மிகக்கடுமையான போராட்டத்தில் உள்ளனர்.
சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் சிறிய வர்த்தகர்கள் பலர், நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெற்று முன்கூட்டியே பட்டாசு ஆர்டர்கள் எடுத்து வாங்கியுள்ளனர்.
கரோனாவால் ஏற்கெனவே பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதால், ராஜஸ்தான் மாநில அரசாங்கத்தின் இத்தகைய முடிவை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால், வர்த்தகர்கள் முற்றிலும் பாதிப்பு அடைவார்கள்.
எனவே, சிறு குறு வணிகர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்களின் நலனுக்காக இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவும், மேலும் இந்த தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சிகரமாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்'இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மின்சார வாகனங்களுக்கு 100% வரி விலக்கு - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு