விருதுநகர் அருகே சின்னையாபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பள்ளிக் கல்வித் துறை, வேர்ல்டு விஷன் இந்தியா ஆகிய துறைகள் சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அனைவரையும் பள்ளிக்கு அனுப்புவோம் போன்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை மனநல நிபுணர் இளவரசி, வச்சகாரப்பட்டி காவல் ஆய்வாளர் ராஜசுலோச்சனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தற்காப்பு நடவடிக்கைகள், உளவியல் சம்மந்தப்பட்ட கேள்விகள் குறித்து பல்வேறு தகவல்களை கற்றுக்கொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியின் 11, 12ஆம் வகுப்பு மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி