விருதுநகர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள 42 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று (பிப்.11) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய கனிமொழி, "சட்டப்பேரவைத் தேர்லில் ராஜபாளையம் தொகுதி தமிழகமே உற்றுப் பார்த்த தொகுதி. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதி. இந்த தொகுதியில் தற்போது உள்ள திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன், யாரை எதிர்த்து போட்டியிட்டார் என்று உங்களுக்கு தெரியும். இந்த தொகுதியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ, அமைச்சர் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்து கர்நாடகத்திற்கு சென்று தலைமறைவாகினார்.
பாஜக மதகலவரத்தை தூண்டிவிடுகிறது
அரசு கஜானாவை காலி செய்ததுதான் அதிமுகவின் சாதனை. உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நாங்கள் உங்களிடம் வேட்பாளர்களாக கொடுத்துள்ளோம். நீங்கள் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைந்து முடித்து அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தரப்படும். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களுக்கு உரிமை கிடையாது. கர்நாடகா மாநிலம் நன்றாக தான் இருந்தது பாஜக ஆட்சிக்கு வந்தபின் மதகலவரத்தை தூண்டிவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மதகலவரத்தை துண்டிவிட்டு நம்மை பிரிக்கப் பார்க்கிறார்கள்.
நாம் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். அதனை முடிவு செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது" என்று பேசினார்.
இதையும் படிங்க: 'தங்க முட்டையிடும் வாத்தை வளர்க்கத் தெரியவில்லை' - எல்ஐசி பங்கு விற்பனை குறித்து சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம்