சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலானோர் வரும் 13ஆம் தேதியன்று விடுமுறை எடுத்துக் கொண்டு நேற்று இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
குறிப்பாக நேற்று பிற்பகல் முதல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்கள், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை வழக்கமான எண்ணிக்கையை விட அதிகரித்தது. இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.நேரம் செல்ல, செல்ல வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அதிக அளவிலான அரசு பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் நள்ளிரவு தாண்டியும் வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி வருவாரா? ஓடி ஒளிவாரா? - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!
கார்கள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் சில மணி நேரம் வரை நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றன. கிளம்பாக்கம் முதல் செங்கல்பட்டு டோல் கேட் தாண்டுவதற்கு வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் பிடித்ததாக வாகன ஓட்டிகள் கூறினர். பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையினர், செங்கல்பட்டு மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவுக்குப் பின்னரே போக்குவரத்து சீரானதாக போலீசார் கூறினர்.
11ஆம் தேதி 2.25 லட்சம் பயணிகள் பயணம்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் நாள் ஜனவரி 11ஆம் தேதி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாள் மட்டும் 4,107 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்கள் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7,513 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக 4,13,215 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 11.01.2025 நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,015 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,107 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது,"எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னை-திருச்சி டோல் கேட்களில் போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில் பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் வாகனங்களால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இரு டோல்கேட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகளின் அதிகப்படியான கட்டணங்களாலும்..அரசின் சார்பில் என்னதான் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் போதிய சீட் கிடைக்காத காரணத்தினால் தங்களுடைய சொந்த நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் சாரை சாரையாக மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதிகப்படியான வாகனங்கள் ஒரே நேரத்தில் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் நிலை ஏற்படுவதால் பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
டோல் கட்டணம் செலுத்துவதற்கு 'பாஸ்ட் ட்ராக்' அமலில் இருந்தபோதும் அதிக நெரிசல் சமயங்களில் தொழில்நுட்ப பிரச்சனைகளால் குறிப்பிட்ட வழித்தடங்களில் இருக்கும் வாகனங்கள் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்ளும் விழா காலங்களில் டோல்கேட்களில் இலவசமாக பயணிக்கும் முறை அமல்படுத்தப்பட்டால் மட்டுமே வாகன நெரிசல்கள் இன்றி மக்கள் விரைவாக தங்கள் ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாட முடியும்.