விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி முன்னிலையில் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டு பராமரிப்பதற்காக பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கொடுக்கக்கூடிய 5 ஆடுகளுமே மிகச்சிறிய ஆடுகள் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மேல் உயிர் பிழைப்பது கடினம். இப்படிப்பட்ட ஆடுகளை கொடுப்பதற்கு பதிலாக இவர்கள் கொடுக்காமலேயே இருக்கலாம்.
வளர்ந்த குட்டிகளை கொடுத்தால் மட்டுமே அது உயிர் பிழைத்து வாழும் அல்லது இந்த சிறிய குட்டிகள் ஓரிரு வாரங்களில் இறந்துவிடும். இதனால் வளர்க்கும் மக்களுக்கு நஷ்டம் ஏற்படும். அரசு எந்த ஒரு ஆடுகளுக்குமே தற்போது வரை இன்சூரன்ஸ் போடாமலே வழங்கி வருகிறது. முதலில் வளர்ந்த நல்ல ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதையும், இன்சூரன்ஸ் போடுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என அங்கு இருந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சரிடம் பொதுமக்கள் மனுக்கள் வழங்கினர். அப்போது ஒரு பெண் தனது குறை குறித்து அமைச்சரிடம் வாதிட்டார். அவர் வழங்கிய மனுவை கொண்டு அந்த பெண்ணை அடித்தார். பின் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் உடனடியாக அந்த மனு மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தற்போது இந்த நிகழ்வு குறித்து எதிர்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து நேற்று பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை; ஏழைப் பெண்கள் தங்களது கோரிக்கையை குறைகளை கூறி மனு கொடுக்க வந்த இடத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் இது போன்று அநாகரீகமாக அடிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும்.
இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு ராஜினாமா செய்யவில்லை என்றால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்நிகழ்வு குறித்து டிடிவி தினகரன்; கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அந்தக் காணொளியை பார்த்த போது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்?
தி.மு.க அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லி திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும்தான் மேடைக்கு மேடை திரு.ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!? என டிவிட் செய்திருந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது; அமைச்சர் எனக்கு அண்ணன் முறை உறவினர். அந்த முறையில் அவர் என்னை செல்லமாக மனுவால் அடித்தார். என கூறினார்.
இதையும் படிங்க: ஆட்சியரிடம் சீறிய சபாநாயகர், எம்.பி., - பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு