விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயிலானது நூறு வருடம் பாரம்பரியமிக்கது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி அமாவாசையன்று பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது நாடு முழுவதும் கோவிட்-19 வைரஸ் தொற்று பரவி வருவதால் பூக்குழி திருவிழா, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் விழா ஆகியவை தடைசெய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து, ஒரு வார காலமாக பூக்குழி விரதம் இருந்துவரும் பக்தர்கள், தமது முன்னோர்கள் கோடைகாலங்களில் பரவும் இதுபோன்ற நோய்களைத் தடுக்கவே மஞ்சளாடை அணிந்து, மஞ்சள் பூசி, மஞ்சள் கலந்த நீரில் நீராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வழிவகைகளை கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற விழாக்களை நடைபெறுவதால், நோய் பரவும் என நினைப்பது தவறு என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் திருவிழாவை சுகாதாரமாக எவ்வாறு கொண்டாடலாம் என்ற பேச்சு வார்த்தையை தொடங்கியது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் ஏற்கனவே தன்மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்காக காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை மிரட்டுவதற்காக திருக்கோயில் வளாகத்தில் கூட்டம் கூட்டி தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மாரி ராஜன், மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ்குமார் சம்பந்தப்பட்ட நபர்களை எச்சரித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பூக்குழி திருவிழா எவ்வித இடையூறும் இல்லாமல் சுமுகமாகவும், சுகாதாரமாகவும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. அதைத்தொடர்ந்து, பக்தர்கள் இந்து முன்னணி கட்சியினர் தங்களின் சுயலாபத்திற்காக நம்மை குழப்பி விட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்ததாக புலம்பியவாறு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: காக்கிக்குள் கலைஞன்! கரோனாவுக்கு எதிராக மிமிக்ரி செய்து அசத்தும் காவலன்