விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற கோயிலாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை, ஆடி, தை, பங்குனி உள்ளிட்ட மாதங்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறும்.
இந்தச் சிறப்பு விழா நாள்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.
இந்நிலையில் நேற்று பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்குப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் பக்தர்கள் அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றினர். இதற்கான ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.