தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சின்ன பேரொளி பிள்ளையார் கோயில் தெருவில் வசித்துவரும் வெயில் முத்து (23) என்பவரிடம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, பணம் விருதுநகரில் உள்ள அனுமார் எண்ணெய் ஆலைக்குச் சொந்தமானது என்றும், அங்கு தான் கணக்காளராக வேலைசெய்து வருவதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.