சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மக்களின் மரபில் ஒன்றிக் கலந்திருக்கும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்துவருகிறது. இந்த பண்டிகைக்கு 2025 ஜனவரி 14 முதல் 16ஆம் தேதி வரை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனவரி 14 முதல் 16-க்கு இடையிலான இரண்டு தேதிகளில் பட்டயக் கணக்காளர் ஃபவுண்டேசன் (CA Foundation) படிப்புக்கானத் தேர்வுகள் நடத்தப்படும் என்று இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, இவர்கள் வெளியிட்டிருக்கும் தேர்வு நாள் பட்டியலில், ஜனவரி 14, 2025 வணிகச் சட்டங்கள் பாடத்திற்கும், ஜனவரி 16, குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்டியூட் பாடத்திற்கு தேர்வு வைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியான மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், இதற்கு கடுமையான எதிர்வினையாற்றி உள்ளார், மேலும், தேர்வுக்கான தேதிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 24, 2024
எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை.
அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை.
ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று.
தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு. 1/2 @nsitharaman @theicai #UnionGovt#ExamsOnPongalDay#தமிழர்திருநாள்… pic.twitter.com/YcdMckPkf3
மறுதேதிக்கு மாற்றவும்
அந்த கடிதத்தில், “சிஏ ஃபவுண்டேஷன் தேர்வெழுதத் தயாராக இருக்கும் தேர்வர்களின் பெற்றோர்கள் பலர் எனது கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பது, தமிழ்நாட்டில் பிரபலமான அறுவடைத் திருவிழா (பொங்கல் பண்டிகை) மற்றும் விவசாயிகள் தினத் தேதிகளில், தேர்வு இருப்பதாகக் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பொங்கல் மற்றும் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு முறையே ஜனவரி 14, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளது. இரண்டு பாடங்களுக்கான தேர்வுகள் அதாவது வணிகச் சட்டங்கள் மற்றும் குவான்டிடேட்டிவ் ஆப்டிட்டியூட் ஆகியவை முறையே ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பண்டிகை நாட்களில் நடைபெறுகின்றன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் கடினமான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள்.
இங்கு இந்த பண்டிகைகள் ஹோலி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற மக்களின் உணர்வுகளுடன் மிகவும் இணைக்கப்பட்டு சிறப்புடன் கொண்டாடப்படுவதாகும். எனவே மேற்கண்ட தேர்வுகளை மறுதேதிகளுக்குத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
நாங்கள் ஓயமாட்டோம்
இது குறித்து சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவின் தொடக்கத்தில், “பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு,” என அறைகூவல் விடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி எக்ஸ் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், தமிழர் விரோத ஒன்றிய பாஜக அரசு என்று குறிப்பிட்டிருந்தவர், தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகளை நடத்துகிறது ஒன்றிய அரசு எனவும் தீபாவளி அன்று தேர்வு நடத்துவீர்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிங்க |
வேடிக்கை திமுக தோழர்களே
இதனை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்திலில் பதிலளித்திருக்கும் பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜே. சூர்யா, “இதே பொங்கல் திருநாள் மகர சங்கராந்தி, வடக்கில் லோஹ்ரி, உ.பி.யில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியானா, பஞ்சாபில் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என பலப் பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
Shameful obfuscation of facts.
— Dr.SG Suryah (@SuryahSG) November 24, 2024
Same Pongal is celebrated as Makar Sankranti, Lohri in North, Khichdi in UP, Uttarayani in Gujarat & Rajasthan, and Maghi in Haryana & Punjab, Bihu in North Eastern States.
So Pongal is a National festival that whole India celebrates & not only in… https://t.co/XFCkhzYxi8
எனவே, பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகையாகும். அப்படி பார்த்தால், உங்கள் வேடிக்கையான கோட்பாட்டின்படி பா.ஜ.க அனைத்து மாநிலங்களுக்கும் எதிரானதா?
இரண்டாவதாக, பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வு தேதிகள் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) எனும் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் இது தீர்மானிக்கப்படுகிறது; நிதி அமைச்சகத்தால் அல்ல!
சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா அவர்களே.
— Nirmala Sitharaman (@nsitharaman) November 24, 2024
எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” ப்ரசாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும். https://t.co/jMkMz8QsNV
தமிழ் விரோதி பிரச்சாரம்
மூன்றாவதாக, தொழில்முறை பாடத் தேர்வுகளுக்கு ஏன் இத்தகைய விடுமுறைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது தொழில் வல்லுநர்களுக்கு மட்டுமே தெரியும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு பயிற்சி நிறுவன செயலாளராக இருக்கிறேன். நான் படிக்கும் நாள்களில் எனது அனைத்து சிஎஸ் தேர்வுகளும் கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு விடுமுறை வரை நடந்தன. இதனால் ஐ.சி.எஸ்.ஐ புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு எதிரானது என்று அர்த்தமா? வேடிக்கை திமுக தோழர்களே!,” என்று பதிலளித்துள்ளார்.
இதனை மறுபதிவிட்டு பதிலளித்திருக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சரியாகவும், விளக்கமாகவும் பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் “தமிழ் விரோதி” பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது போலும்,” என்று பதிவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது (CA) தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 24, 2024
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களும்…
தேதியை உடனடியாக மாற்றுக
இது குறித்து தனது எக்ஸ் தள வாயிலாக கருத்துத் தெரிவித்திருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “பொங்கல் பண்டிகையின் போது (CA) தேர்வுகள் நடைபெறுவது தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – தமிழர் திருநாளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக தேர்வுக்கான அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும்.”
“தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக, தேர்வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இரு தேர்வுகளையும் வேறு ஒரு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என மத்திய அரசையும், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தையும் (ICAI) வலியுறுத்துகிறேன்,” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.