சென்னை: சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த நிலையில், விமான நிலையத்தில் மயங்கி விழுந்து புற்றுநோய் நோயாளி உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் விசாரணையில், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் குமார் சிங்கி (63). தொழிலதிபரான இவர், மொத்த சிமெண்ட் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தொண்டையில் ஏற்பட்டிருந்த புற்றுநோயால் இவர் சிக்கிச்சைப் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பிரகாஷ் குமார் சிங்கி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்து, அவரது மகன் உத்தம் சிங்க (28) உடன், அகமதாபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் நேற்று, சனிக்கிழமை (நவ.23) சென்னைக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
விமான நிலையத்திற்கு வந்த நிலையில், பிரகாஷ் குமார் சிங்கியை வீல் சேரில் அமர வைத்து அவருடைய மகன் தள்ளிக்கொண்டு வெளியில் அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், பிரகாஷ் குமார் சிங்கி ரத்த வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து, அவரை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை விமான நிலைய போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தவர் விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்