விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வருகின்ற 27ஆம் தேதி மீண்டும் மூன்று பேரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு இவ்வழக்கை ஒத்திவைத்தார்.
பேராசிரியர் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கல்லூரி செயலர் ராமசாமி அரசு தரப்பில் மூடிய அறையில் விசாரிக்கப்பட்டார். நிர்மலா தேவியை அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய தடைவிதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி 27ஆம் தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்துள்ளார். நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி 1 முதல் 32 சாட்சிகளை படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், நிர்மலாதேவி குறித்து செய்தியாளர்கள் செய்தி வெளியிட தடை இல்லை என்று நீதிபதி கூறினார். நிர்மலாதேவி வழக்கில் தமிழ்நாடு ஆளுநரும், அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால் நிர்மலா தேவிக்கு உரிய நியாயம் கிடைக்காது.
எனவே, இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: வறுமையின் காரணமாக உயிரிழந்த குடும்பம்