விருதுநகர் : தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் புத்தாடை, பட்டாசு, திண்பண்டங்கள் இந்த மூன்றும் தான் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு திண்பண்டங்கள் பிரபலமாக இருக்கும்.
அந்தவகையில், திருநெல்வேலி அல்வா,மதுரை ஜிகிர்தண்டா,மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில், விருதுநகர் சாத்தூர் என்றலே நினைவில் வருவது காரச்சேவு தான்.
பாரதியார் வீரப்பலகாரங்கள் என ஒரு பட்டியல் போடுகிறார். அதாவது சாப்பிடும் போது ‘கரமுறகரமுற’ என இருக்கும் முறுக்கு, வறுவல்(சீவல்), சேவு போன்ற பலகாரங்களைச் சாப்பிட்டால் ஓர் உற்சாகம் பிறக்கும். இம்மாதிரியான பலகாரங்களுக்கு அவர் வேடிக்கையாக ‘வீரப்பலகாரம்’ என சிறப்பு அடைமொழி கொடுக்கிறார்.
இந்த வீரப் பலகாரத்தில் குறிப்பிடத்தகுந்தது ‘சேவு’. இதை வட தமிழ்நாட்டில் ‘காரசேவு’ என அழைக்கிறார்கள். பொதுவாகத் தென்மாவட்டத்தில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, வறுவல் தயாரிப்பில் பெயர் பெற்றவை. ஆனாலும் சேவுக்கெனப் புகழ் பெற்ற ஊர் சாத்தூர் தான்.
சாத்தூர் சேவு ருசிக்கு காரணம்?
சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன் ருசியால் ஈர்த்துவிடும் குணம் கொண்டது சாத்தூர் சேவு. இந்தக் கார சேவு, வட இந்தியத் தின்பண்டமான ‘புஜியா’விலிருந்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் புஜியா இன்னும் சிறியதாக இருக்கும்.
சாத்தூர் காரச்சேவ் ருசி முதலமைச்சர்களாக இருந்த காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களையும் ஈர்த்துள்ளது. சாத்தூர் காரச்சேவு பலகார பிரியர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு காரணம் சாத்தூர் பகுதியில் ஓடும் வைப்பாறு ஆற்று நீர், சாத்தூர், சுற்று வட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வற்றல் ஆகியவை தான்.
பெரியவர்கள் விரும்பும் காரசேவு
காரச்சேவு வகைகளில் நயம் சேவு, நடப்பு சேவு, காரச்சேவு, சீரக சேவு, மிளகு சேவு, பட்டர் சேவு, சர்க்கரை சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன. நடப்புச் சேவு சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும் இருக்கும். காரம் ஓரளவு கொண்ட சேவு ரகம் பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும் தயாரிக்கபடுகிறது.
சற்று தடிமனுடன் கடுமையான காரத் தன்மையுடன் தயாரிக்கப்படும், காரச்சேவு வகைகள் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். சாத்தூர் சேவு வகைகள் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுவதால் தமிழ்நாடு அளவில் சாத்தூருக்கு வந்து வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
காரச்சேவு தயாரிப்பு விறுவிறுப்பு
வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுவாழ் தமிழர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேவு வாங்க கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தலை தீபாவளி கொண்டாடும் திருமண தம்பதிகளுக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன் சாத்தூர் காரச் சேவினையும் வாங்கி செல்கின்றனர். மேலும் இனிப்பு வகைகளில் கருப்பட்டி மற்றும் சீனி மிட்டாய்களும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
சென்ற ஆண்டை விட இந்த தீபாவளிக்கு சேவு தயாரிப்பு அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் கரோனா தடைகாலத்தினால் ஏற்பட்ட இடர்பாடு காரணமாக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையேற்றத்தினால் சேவு உள்ளிட்ட காரம், இனிப்பு வகைகள் கிலோவிற்கு ரூ.20 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் யுகத்தில் காரச்சேவு
இதுகுறித்து சாத்தூர் சேவு கடை உரிமையாளர் கூறும்போது, ”சாத்தூரில் நூறு ஆண்டுகளாக காரச்சேவு தயாரிப்பில் துளி அளவுகூட ருசி மாறாமல் கைப்பக்குவத்தில் தயாரிக்கிறோம். இதனால் சாத்தூர் காரச்சேவுக்கு மவுசு அதிகம். சாத்தூரில் சேவு மற்ற வகைகளுக்கு ஒரு தடவை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த மாட்டோம். அதனால் சேவு 40 நாட்கள் வரையி கெட்டு போகாமலும், மொறு மொறுப்பு தன்மை குறையாமலும் இருக்கும். மேலும் சாத்தூர் பகுதியில் விளையும் மிளகாய் வத்தலுக்கு காரம் அதிகம் என்பதாலும், எத்தனை பாஸ்புட் கடைகள் வந்தாலும் வெளியூரிலிருந்து வந்து சாத்தூரில் சேவு வாங்கி செல்வது அதிகம்.
மேலும், சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் வசிக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் இங்கிருந்து காரச்சேவு மற்றும் சீனி மிட்டாய் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்தில் காரச்சேவு வகைகள் ஆன்லைன் மூலமும் ஆர்டர்கள் பெறப்பட்டு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: ஒரு கிலோ ஸ்வீட்ஸ் 25000 ரூபாயாம்! அப்படி என்ன இருக்கு அதுல?