விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நத்தம்பட்டி செல்லும் சாலையில் பஞ்சாயத்திற்கு பாத்தியப்பட்ட பயன்படாத கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் கடந்த வாரம் ராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் மற்றும் ஆய்வாளர் பார்த்திபனின் தலைமையில் கிணற்றில் காவல் துறையினர் பார்வையிட்டனர்.
அப்போது சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இறந்தநிலையில் உடல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் 55 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜபாளையம் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக காணாமல் போனவர்கள் என காவல் நிலையத்தில் யார் யார் புகார் கொடுத்துள்ளார்கள் என காவல் துறையினர் விசாரணை தொடங்கினர்.
இதில் சத்திரப்பட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தாய் (55) என்பவர் கடந்த மூன்று தினங்களாக காணவில்லை என அவரது கணவர் புகார் அளித்துள்ளார். கணவரை அழைத்துச் சென்று உடலை அடையாளம் கண்டனர்.
அதைத்தொடர்ந்து ஆறுமுகத்தாயை கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்திரப்பட்டியை அடுத்துள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (30) என்பவர் ஆறுமுகத்தாயிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், வாங்கிய பணத்தை கொடுக்காமல் வட்டி கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
பிறகு அறுமுகத்தாயை அய்யனாபுரம் பகுதியில் பணம் தருவதாகக் கூறி அழைத்து சென்று,புதர் பகுதியில் பின்புறமாக கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் சரவணனுக்கு உடந்தையாக இருந்த ராசையாவும் (60) இவரும், சேர்ந்து அறுமுகத்தாயின் கை கால்களை கட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் உடலை வீசி சென்றுள்ளதை விசாரணையில் கூறினர். தொடர்ந்து இவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீர் செய்யக்கோரி நாற்று நடும் போராட்டம்!