கரானோ தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விருதுநகரில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பேசிய அவர், " கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மருந்து வந்தால் தமிழக மக்களுக்கு அரசின் சார்பில் அந்த மருந்து வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 6 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 7 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழில் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். பட்டாசுத் தொழிலைக் காக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனியாக அவர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்படும்.
மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறும் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா? யாரோ எழுதிக்கொடுப்பதை வைத்துப் படிக்கும் ஸ்டாலின், வேளாண் சட்டங்களால் என்ன தீமை என்பதை கூற வேண்டும். கரோனா பாதித்து இறந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பில்மர்மம் இருப்பதாக, வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அவதூறான செய்தியைப் பரப்பி வருகிறார். அப்படி இருந்தால் என்ன மர்மம் என்று ஸ்டாலினே கூறட்டும். அதே காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் சிகிச்சை பெற்றார். அப்படியெனில் அவரது மரணத்திலும் மர்மம் உள்ளதா? மருத்துவர்களை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதை ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் கூட அடுத்தத் தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மீதான கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முடிவு வேறு விதமாக இருந்தால் 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க முடியாது “ என்றார்.
இதையும் படிங்க: ’திமுக பெரும் வெற்றி பெறும்’ - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை!