தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி, சென்னையில் நடந்தது. ஒத்திவாக்கத்தில் உள்ள அதிதீவிர விரைவுப் படை பயிற்சிப் பள்ளியில் கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் போட்டியில், பெண்கள் அணியில் உதவி ஆய்வாளர் துர்காதேவி தலைமையில் விழுப்புரம் ஆயுதப்படை பெண் காவலர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்று மாநில அளவில் ஐந்தாவது இடத்தைப்பிடித்தனர்.
இதேபோல், கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் 300 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் நான்காம் இடம் பிடித்து அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தூப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனை படைத்த பெண்கள் அணியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.