தமிழ்நாட்டில் கரும்பு பயிர் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாகும். டிசம்பர் - ஜனவரியை முன்பட்டம் எனவும், பிப்ரவரி - மார்ச் மாதத்தை நடுப்பட்டம் எனவும், ஏப்ரல் - மே காலத்தை பின்பட்டம் எனவும் வகைப்படுத்துகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தொடங்கி கடலூர் மாவட்டம் வரை அதிக அளவு கரும்பு பயிரிடப்படுகின்றன. பிடாகம், குச்சிப்பாளையம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டுள்ள இக்கரும்புகளை வேளாண்துறை நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் வழங்குகிறது.
கடந்தாண்டு பாதி கரும்பு விநியோகிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு முழு கரும்பு வழங்கப்படுவதால் அரசின் நேரடி கொள்முதல் அதிகரித்துள்ளது. இது, விவசாயிகளிடத்தில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு நேரடி கொள்முதல் திட்டம் மூலம் 20 கரும்புகளை கொண்ட ஒரு கட்டுக்கு 320 ரூபாயிலிருந்து 340 ரூபாய் வரை கிடைக்கிறது. ஒரு ஏக்கர் கரும்பு பயிர் விவசாயத்துக்கு 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உற்பத்தி செலவாகிறது.
இந்தக் கரும்பு பயிர்கள் செழித்து வளர ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூர் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதும் விவசாயிகளின் விருப்பம்!