விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்துள்ள டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நனோபா என்பவரது மகன் கலீல் என்கிற முகமது ஈசா(45). இவர் நேற்று (அக்.31) மாலை சொத்து தகராறு காரணமாக திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கடலூர் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள டி.குன்னத்தூர் அருகே வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த 3 அடையாளம் தெரியாத நபர்கள், முகமது ஈசாவின் வாகனத்தை வழிமறித்து அவரின் பின்தலையில் வெட்டியுள்ளனர்.
இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரது உறவினர்கள், திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து காவல் துறையினர், முகமது ஈஷாவின் உடலை உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பணகுடியில் சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்கள்!