வேலூர் : வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த ஒனாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (55). இவர் அருகே இருக்கும் காப்பு காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, துப்பாக்கிக் குண்டு இவரது வயிற்றுப் பகுதியிலும், தொடை பகுதியிலும் பாய்ந்துள்ளது.
இதனால் பலத்த காயம் ஏற்பட்டு விவசாயி கீழே சரிந்தார். இதனைப்பார்த்த அப்பகுதிமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு விவசாயி அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுதொடர்பாக உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இதே பகுதியைச் சேர்ந்த முருகன் (52) என்பவரை போலீசார் கைது செய்து, நாட்டு துப்பாக்கி மற்றும் மருந்து குண்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளை இழந்த கிராம மக்கள்; மழை ஓய்ந்த பின்பும் இருளிலேயே மூழ்கியுள்ள இருவேல்பட்டு!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட முருகன் வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிய வந்துள்ளது.
பேர்ணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி வருவதை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காப்புக்காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பேர்ணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.