தஞ்சாவூர் : திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிச 13ம் தேதி அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவர். இவ்வாறு தீபங்களை ஏற்ற பயன்படும் அகல் விளக்குகளை தயாரிப்பதில், தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதி, சாலைக்கார தெரு, குயவர் தெரு ஆகிய இடங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 9 நாட்களே உள்ள நிலையில் மக்களும் விளக்குகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். பல வடிவங்களில் விளக்குகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கின்றன.
இந்நிலையில், அகல் விளக்குகள் தயார் செய்வதற்கு மண் கிடைப்பதில்லை. அவ்வாறு மண் கிடைத்தாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருப்பதாக, அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : அழியும் நிலையில் அகல் விளக்கு செய்யும் தொழில் - செவிசாய்க்குமா அரசு?
இது குறித்து அகல் விளக்குகள் தயாரிக்கும் தொழிலாளி புவனேஸ்வரி என்பவர் கூறுகையில், "பல தலைமுறையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். ஆனால் தற்போது அகல் விளக்குகள் தயாரிக்க மண் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.
மண் எடுப்பதற்கு அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும். மேலும், தஞ்சையில் அவ்வப்போது பெய்யும் மழையினால் விளக்குகளை காய வைக்க முடியவில்லை. மேலும், சூலை வைப்பதற்கு தேவையான தென்னை மட்டை, வைக்கோல் ஆகியவை கிடைப்பதில்லை. அவைகள் கிடைத்தாலும் அதிக தொகை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
பொதுமக்கள் காலத்திற்கு ஏற்ப பீங்கான் விளக்கு, மெழுகு விளக்கு போன்றவற்றை வாங்கி ஏற்றுவதன் மூலம் மண் விளக்கை வாங்குவதில்லை. இதனால் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், எங்களது தொழில் நலிவடைந்து வருகிறது.
வரும் காலங்களில் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. எனவே, அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் காலங்களில் சூலை அமைப்பதற்கு கொட்டகை அமைத்து தர வேண்டும். கடன் உதவி வழங்க வேண்டும். இந்த தொழிலை நம்பி சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்" என தெரிவித்தார்.