சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என தமிழக அரசு சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
அதில், "விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசால் போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 105 நிவாரண முகாம்களில் 20,625 நபர்கள் (ஆண்கள் - 8,885, பெண்கள்- 8,919, குழந்தைகள் - 2,821) பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் வகையில் வெளி மாவட்டங்களிலிருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரால் அரிசி, மளிகைப் பொருட்கள், ஆடைகள், போர்வைகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பால்பவுடர் பாக்கெட்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மக்களுக்கு ஏற்படும் தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் 183 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 11,578 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மூன்று நகராட்சிகளிலும் மழைநீர் சூழ்ந்த 42 வார்டுகளில் 469 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டும், பேரூராட்சிகளில் மழைநீர் சூழ்ந்த 12 வார்டுகளில், 333 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பணிகள் இன்று நடைபெற்றது.
இதேபோல, கடலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடர்ச்சியாக, தென்பெண்ணை ஆற்றில் 02ஆம் தேதி அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டம், மற்றும் பண்ருட்டி வட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் அதன் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் 25க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளை இழந்த கிராம மக்கள்; மழை ஓய்ந்த பின்பும் இருளிலேயே மூழ்கியுள்ள இருவேல்பட்டு!
அந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினருடன் இணைந்து பொதுமக்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்றி பாதுகாப்பு தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
மேலும், கடலூர் மாவட்டத்திலுள்ள 35 நிவாரண முகாம்களில் 19,654 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 15 இடங்களில் சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பால் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற பால் பாகெட்டுகள், பிரட் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டும் அல்லாது, தொற்றுநோய்களில் இருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில், 50 இடங்களில் நடத்தப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் 5285 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில், புயல் மற்றும் கனமழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்த பொழுதிலும் எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தொடர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இதுவரை வீடு பாதிப்பு மற்றும் கால்நடை உயிரிழப்பு ஆகியவற்றிற்காக நிவாரணத்தொகை 37 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பயிர் சேதம் குறித்த கணக்கெடுப்பு பணிகளும் நடைபெற்றுவருகிறது. கனமழை பாதிப்பினைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 16 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட 1980 நபர்கள் அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு அவ்வப்போது உணவுகளும், மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாராக, கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.