மதுரை: திருச்சியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கிதியோன் ஜேகன் மற்றும் பாஸ்டர் கிதியோன் ஜேக்கப் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, "மனுதாரர்கள் 1994 ஆம் ஆண்டில் இருந்து 1999 ஆம் ஆண்டு வரை 89 குழந்தைகளை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து பொய்யான வாக்குறுதி அளித்து, அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டு, வளர்த்து வந்ததாகவும், அவர்களில் சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மீது பாரதிய சக்ஷய சட்டப் பிரிவு 370 பதியப்பட்டுள்ளது. நபர்களை அடிமையாக விற்பது, வாங்குவது போன்ற செயல்கள் எதையும் மனுதாரர் செய்யாத நிலையில், அவர் மீது இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது ஏற்கத்தக்கது அல்ல.
இதையும் படிங்க: கருணை மனு: குடியரசுத் தலைவரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!
அதேபோல சிறுமிகளின் பெற்றோரிடம் பொய்யான வாக்குறுதியில் கையெழுத்து பெற்றதாக அவர் மீது பாரதிய சக்ஷய சட்டம் பிரிவு 467ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பெற்ற ஆவணங்களை வைத்து முறைகேடு செய்தால் மட்டுமே அப்பிரிவு பொருந்தும் ஆகவே அதுவும் ஏற்கத்தக்கது அல்ல.
எனவே மனுதாரர் மீது பாரதிய சக்ஷய சட்டப் பிரிவு 370, 467 மற்றும் பிரிவு 24 ஆகிய பிரிவுகளின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. மீதமுள்ள பாரதிய சக்ஷய சட்டப் பிரிவு 370A மற்றும் 201 பிரிவுகளை கொண்டு விசாரணை நீதிமன்றத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எதிர்கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.