சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் குறித்து டிசம்பர் 31ஆம் தேதி 5 அரசாணைகள் வெளியிடப்பட்டன. அந்த அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள “விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆட்சேபனைகள் இருந்தால் ஆணை வெளியிடப்பட்டு 6 வாரங்களுக்குள் முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம்.
இதையடுத்து, தங்களது கருத்துகளை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி பரிசீலனை செய்து, இறுதிமுடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விரிவாக்கம் செய்யும் மாநகராட்சி, நகராட்சிகள்: சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சி இணைக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள்.. புத்தாண்டு தினத்தில் அரசு அதிரடி முடிவு!
மேலும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொள்ளபடுவதாக” அந்த 5 அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.