வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் விமரிசையாகக் கொண்டாடக்கூடிய பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த விழாவினை முன்னிட்டு வீடுகளில் மட்டுமல்லாது, சாலைகளின் முக்கிய இடங்களிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவர். தமிழ்நாட்டில் மண்பாண்ட தொழில் நலிவடைவதால் அத்தொழிலிலிருந்து பலர் காகிதக்கூழ் விநாயகர் சிலைகள், பொம்மைகள் தயாரிப்பு உள்ளிட்ட மாற்று தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அய்யன்கோவில்பட்டு, அரசூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதியில் விநாயகர் சிலை செய்யும் தொழிலை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். இவர்கள் கடந்தாண்டு இறுதியிலிருந்து விநாயகர் சிலைகளை செய்ய தொடங்கினர். ஆகஸ்ட் மாதம்தான் விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கும். ஆனால் கரோனா தீவிரத்தால், இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி நடக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் திகைத்துபோயினர் இத்தொழிலாளிகள்.
விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சிலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலை செய்யும் தொழிலாளர் ஹரிகிருஷ்ணன், “நாங்கள் ஆண்டு முழுவதும் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சிலைகளை தயார் செய்து வைத்துள்ளோம். கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நடைபெறாது என்ற தகவல் பரவிவருகிறது. இதனால் விநாயகர் சிலைக்கு முன்பணம் கட்டிய வியாபாரிகள் பணத்தை திருப்பிக் கேட்கின்றனர்.
இந்தத் தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் முன்பணத்தை எப்படி திருப்பிக் கொடுப்பது என குழப்பத்தில் உள்ளனர். சிலை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டன. இந்தச் சமயத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுமா? என்பது குறித்து தெளிவான தகவல் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். இது குறித்த அறிவிப்பை அரசாங்கம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிலை செய்வதற்காக இம்மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தது 30 முதல் 40 பேர் வரை பணிபுரிந்துவருகின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இத்தொழிலில் முதலீடு செய்கின்றது.
இந்நிலையில் கரோனா நெருக்கடி ஒரு நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள் மூலம் கடனாகப் பெற்ற பணத்தில் தொழிலை மேம்படுத்தியுள்ள நிலையில் இந்நெருக்கடி இவர்களை நிலைகுலையச் செய்துள்ளது.
கரோனா அச்சத்தில் சிலைகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வரவில்லை என வேதனைத் தெரிவிக்கும் தொழிலாளி பலராமன், ”சிலை தயாரிக்கும் பணிக்காக கடன் வாங்கி முதலீடு செய்துள்ளோம். தற்போது வட்டியைத் திருப்பிச் செலுத்தக்கூட பணம் இல்லை.
இந்த மாத மின்சார கட்டணம் கட்டுவதற்கு கூட பணம் இல்லை, அரசு அதற்கு கால அவகாசம் கொடுத்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கென நிவாரணத் தொகைகூட இல்லை. தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை வாங்கும் போது எங்களிடம் கூடுதல் வரி வசூல் செய்யப்படுகிறது.
இதில் அரசு தலையிட்டு எங்களுக்கு வரிச்சலுகை அளிக்கவேண்டும். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி நடைபெற்றால் ஓரளவுக்கு செலவு செய்த பணத்தை மீட்டு எடுப்போம், இல்லையெனில் எங்கள் குடும்பம் நடு வீதிக்கு வந்துவிடும்"என்றார்.
இதையும் படிங்க: முறையற்ற பரபரப்பு செய்திகளாக மாறி வரும் தற்கொலைச் செய்திகள்