விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதியன்று மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
அது மட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தல 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடு பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்ட பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். தமிழக அரசு மது விற்பனை மற்றும் அதன் வருமானத்திலேயே குறியாக இருக்கிறது எனவும், இதுபோன்ற கள்ளச்சாராய நிகழ்வுகளை தடுக்க முயற்சிப்பது இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஸ்ரீநாதா, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காலியாக இருந்த பணியிடத்தை நிரப்பவும், அங்கு நிலவும் பரபரப்பான சூழலை சரிக்கட்டவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளில் நாட்டம் காட்டவும் தகுதியான வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சேஷாங் சாய், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தனது பணியில் பொறுப்பேற்றுக்கொண்ட சேஷாங் சாய், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
கடும் எச்சரிக்கை: பணியேற்ற உடனேயே அம்மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை, மணல் கடத்தல், கள்ளச்சாராயம் விற்பனை, மற்றும் அயல்மாநில மதுபாட்டில்கள் கடத்தல் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். அந்த பணியை செய்யாமல் அதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு துணை போனால் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அதிகாரிகள் எந்தவித புகாருக்கும் இடமளிக்காதவகையில் பணியாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பணியாற்ற விரும்பவில்லை எனில் விழுப்புரத்தில் இருந்து பணியிட மாறுதலாகி சென்றுவிடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சேஷாங் சாய் கடும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனிப்பிரிவு போலீஸாருக்கு அறிவுரை; தொடர்ந்து, தனிப்பிரிவு போலீசாரை அழைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேஷாங் சாய், அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், எக்காரணத்தை கொண்டும் குற்ற சம்பவத்திற்கு துணை போகக் கூடாது என அவர் எச்சரித்ததாகவும், அதுபோல் குற்ற சம்பவங்களுக்கு துணைபோகும் போலீசாரை பற்றி தகவல் தெரிவிக்காமல் அவர்களுக்கு துணை போனாலும் சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேஷாங் சாய், மாவட்ட கலெக்டர் பழனி, விழுப்புரம் சரக போலீஸ் டி. ஐ. ஜி. ஜியாவுல் ஹக் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.