திருச்சி: நாட்டின் மிகப்பெரிய பறவைகள் பூங்காவுடன் கூடிய பறவைகள் கூடத்தை (Birds Park cum Aviary) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (பிப்.9) திருச்சியில் திறந்து வைத்தார். இந்த பூங்காவானது, 4.02 சுமாா் ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்காவின் கட்டுமான பணிகள் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த பணிகள் சமீபத்தில் முடிவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவை திறந்து வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூங்காவில் உள்ள பறவைகளை பார்வையிட்டு உணவு அளித்தார். தொடர்ந்து, பறவைகளைக் கையில் பிடித்தவாறு செல்பி எடுத்துக் கொண்டார்.
சிறப்புகள்: இந்த பூங்காவானது, இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய பறவைகள் பூங்காவுடனான பறவைகள் கூடம். இந்த பறவைகள் பூங்காவில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
![திருச்சி பறவைகள் பூங்கா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23510228_birds-park.jpg)
இதுமட்டுமல்லாமல், பூங்காவில் புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வகைகளில் நெருப்புக்கோழி, ஈமு கோழி, முயல் வகை, புறா, நாட்டுக்கோழி வகைகள், வாத்து, கரட்டான் வகைகள், பாம்புகள், லவ் பேர்ட்ஸ் போன்று பறவை வகைகள் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கட்டணம்: இங்கு முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7D திரையரங்கு, அமைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 200 ரூபாயும், சிறியவர்களுக்கு 150 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவசம்.
என்ன உள்ளது அப்படி? மேலும், இதில் குறிப்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கடிகாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அதேபோல், குறிஞ்சி (மலைகள்), முல்லை (காடுகள்), மருதம் (வயல்கள்), நெய்தல் (கடற்கரைகள்), பாலை (பாலைவனங்கள்) ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக புல்வெளிகள், சிற்பங்கள், நீரூற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைப்படங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா அமைந்துள்ளது.
உதயநிதி பேட்டி: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இன்று திருச்சியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.18.63 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பறவைகள் பூங்காவுக்கு 2023 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார். தற்போது அந்த பறவைகள் பூங்கா திறக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சையில் நாய்கள் கண்காட்சி: செல்லப்பிராணிகளை கொஞ்சி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!
இங்கு 40 வகையான வெளிநாட்டு பறவைகளுடன் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்று உள்ளன. 50 பேர் அமர்ந்து காணொளி காட்சியை ரசிக்கும் படி திறந்த வெளி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறவைகள் பூங்காவை திருச்சி மக்கள் மட்டும் இன்றி வெளி மாவட்ட மாநில மக்களும் பார்த்து ரசிக்கலாம். டெல்லி தேர்தலில் மக்கள் முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, வாக்களித்துள்ளனர். அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.