விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் தினசரி அதிகாலை 5மணி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படும். ரயில் நிலையத்திற்கு வரும் பக்தர்கள் இந்த கோயிலில் தவறாது சாமி தரிசனம் செய்து விட்டு தங்களது பயணத்தை மேற்கொள்வது வழக்கம். இதனால் இந்த கோயிலில் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் நேற்று கோயில் பூசாரி தனது சட்டைப் பையில் இருந்த பணத்தை காணவில்லை என இருப்பு பாதை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரயில்வே காவல்துறையினர் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போது, அதில் காவல்துறையினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சி பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலையில் கோயிலுக்குள் வருவதும், கோயிலுக்குள் வந்து நோட்டமிட்டு கொண்டே பூசாரி சட்டைப்பையில் இருக்கும் பணத்தை திருடுவதும்,பின்னர் பக்தர்கள் வருவதை அறிந்து அங்கிருந்து செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து கோயில் பூசாரி ராஜா கூறுகையில்., 'காலையில் மூலவர் செல்வ விநாயகரை அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் பின்புறமாக வீற்றிருக்கும் முருகக் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுதுதான் அடையாளம் தெரியாத நபர் தன் சட்டைப் பையிலிருந்த 3,800 ரூபாய் ரொக்கத்தை திருடிசென்றிருக்கிறார் என்றார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.