சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக கடந்த 2012ஆம் ஆண்டு வானூர் தாசில்தாராக பணியில் இருந்த குமரபாலன் என்பவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்பி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்முடி உள்ளிட்ட ஐந்து நபர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இதனையடுத்து, பொன்முடி தரப்பு வழக்கறிஞர், அமைச்சர் பொன்முடி இந்த வழக்கிலிருந்து விடுவிக்க நீதிபதி பூர்ணிமாவிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!