சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை அளிப்போம் என மத்திய அரசு கூறுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு, வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 (பேரறிவுச் சிலை - Statue of Wisdom) என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இன்று (டிசம்பர் 23) திங்கட்கிழமை முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஸே் பொய்யாமொழி தொடங்கி வைத்து, திருவள்ளூர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வைத்து, 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களை வெளிநாடு அழைத்துச் செல்வது என்பது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 100 மாணவர்களில், முதற்கட்டமாக 42 பேரை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறோம்.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககத்தின் சார்பாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் " பேரறிவுச் சிலை" வெள்ளி விழாக் கொண்டாட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) December 23, 2024
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை… pic.twitter.com/fSP0Cd1h0a
தற்போது, கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கூறப்படும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இணையதள கட்டணம் கட்டவில்லை என்பது தவறு. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைப் பற்றி பேச மத்திய அரசு மறுக்கிறது. இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவையில் வைப்பதற்கான அவசியம் இல்லை. மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 151 கோடி நிலுவையில் உள்ளது.
மும்மொழி கொள்கை:
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், அடுத்த அரை நேரத்தில் நிதி கொடுக்கிறோம் என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பேசும் போது, தானும் இந்தி அல்லாத பிற மொழி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தான், நீங்களும் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'அமித் ஷாவுக்கு கண்டனம்' - திமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி அளிக்கிறது. இந்நிலையில், பணத்தைக் குறைக்கும் போது, அதனை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு போக முடியவில்லை. ரூ.1 கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு வருகிறது. இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாகக் கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் மத்திய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
பல்வேறு வகைகளில் கல்வியில் சாதனை புரியும் தமிழ்நாட்டு மாணவர்களையும், ஆசிரியர்களையும் மத்திய அரசு ஏமாற்றி வருகின்றது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்வி மாநில பட்டியலில் கொண்டு வரும்போது நமது தேவை என்ன என்பது குறித்து நாம் முடிவு செய்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.