விழுப்புரம் : கரோனா தொற்று பாதிப்பால் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் அமைச்சர் கே. எஸ் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.
மரக்காணம் அடுத்த முதலியார் குப்பத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள காரணத்தினால், அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மே.28) மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. எஸ் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாடு நடவடிக்கைகள், தடைசெய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் சரியாக வழங்கப்படுகிறதா என அவர்களது அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அந்த ஆய்வின் போது அகதிகள் முகாமிலுள்ள மக்களிடம் அமைச்சர், “உங்களது குறைகளை தீர்த்து வைக்க முதலமைச்சர் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்னும் தனித் துறையை உருவாக்கி அதற்கு என்னை அமைச்சராக நியமனம் செய்துள்ளார். விரைவில் தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்” என உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கோவையில் ஒரே நாளில் 4,734 பேருக்குக் கரோனா உறுதி!