விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வீரணாமூர் ஏரிக்கரை மேட்டில் இருளர் இனத்தைச் சேர்ந்த 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பனையோலைக் குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களில் சின்னசாமி-லஷ்மி தம்பதியினரும் அடக்கம். சென்னைக்கு அருகே இருந்த செங்கல் சூளையொன்றில் 10 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமைகளாக இருந்த இவர்களுக்கு சங்கீதா (17), அனிதா (12), வித்யா (7) என மூன்று மகள்கள் உள்ளனர். தற்போது கூலிவேலை செய்து வரும் சின்னசாமி, தன் இன மக்களுக்கு முன்னுதாரணமாக தனது மகள்களை படிக்க வைத்துவருகிறார்.
இவரின் மூத்த மகள் சங்கீதா 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 236 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதோடு, இப்பகுதியிலுள்ள இருளர் இன மக்களில் பத்தாம் வகுப்பு வரை படித்த முதல் நபர் என்ற சாதனையையும் படைத்தார். அதனையடுத்து மேல்நிலைக் கல்வியைத் தொடர வேண்டும் என்று விரும்பிய சங்கீதாவுக்கு தனது குடும்பத்தின் வறுமை தடையாக இருந்தது. அதையறிந்த பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி, ஆலோசகர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சங்கீதாவின் கல்விக்கு உதவினர்.
பாடங்களில் வரும் சந்தேகத்தை கேட்டுத் தெளிவுபெற ஆளில்லாத நிலையில் - படிப்பு வாசனையையே அறியாத பரம்பரையில் வந்த சங்கீதா, தன்னால் இயன்றவரை படித்து வந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். வெளியில் செல்லவே முடியாத நிலையில் இருந்த அவர், மிகுந்த சிரமங்களுக்கிடையில் தேர்வை எழுதி தற்போது 263 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார்.
செவிலியர் படிப்பை முடித்து ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்ற சங்கீதாவின் லட்சியக் கனவைக் நனவாக்கவும் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சங்கீதாவின் சாதனை தந்த நம்பிக்கையில் மற்ற பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முன்வந்தனர். இதன் விளைவாக தற்போது வீராணமூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 22 மாணவர்கள் பள்ளி படிப்பை பயின்று வருகின்றனர்.
ஏரிக்கரை மேட்டில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி வாழ்ந்துவரும் இம்மக்களின் நிலையறிந்த மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், அந்த 26 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா, தனி வீடுகள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கொத்தடிமையாக இருந்த குடும்பத்தில் வளர்ந்து, வறுமையோடு போராடி படித்த சங்கீதா, இருளர் இன மக்களின் இருண்ட வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்றியிருக்கிறார் என்றால் அது மிகையில்லை.