விழுப்புரம் மாவட்டம் வானூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று(செப்.26) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மணி விழா நடைபெற்றது. இதில் விருந்தினர்களாக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தீய சக்தி என்றும் அந்த கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்றும் எச். ராஜா தொடர்பு இல்லாத விஷயங்களில் எங்களை தொடர்பு படுத்தி அவதூறு கருத்துக்களை சொல்லி சீண்டி வருகிறார்.
நாங்கள் நடத்தும் போராட்டங்கள், எங்களுடைய அரசியல் சனாதனதர்மத்திற்கு எதிரான கொள்கைகள் மீது அவருக்கு எந்த அளவுக்கு வெறுப்புணர்வு இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் பாஜக தலைவர்கள் தங்களை தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக மக்களிடத்தில் விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர்.
பாஜக அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக தமிழ்நாட்டில் உலா வர நினைக்கிறது. இதனை நாங்கள் புரிந்து கொண்டோம் அதிமுக கட்சித் தலைவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது அவதூறான கருத்துக்களை தெரிவித்தால் அதற்கு உரிய தக்க பதிலடி கொடுக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...