தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. இதில் 91.3 விழுக்காடு அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி விகிதத்தை பொருத்தவரை 95.37 விழுக்காடு தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது. ஈரோடு 95.23 விழுக்காடு தேர்ச்சியும், பெரம்பலூர் 95.15 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து கோவை 95.01 விழுக்காடு தேர்ச்சியும், நாமக்கல் 94.97 விழுக்காடு தேர்ச்சியும் பெற்றிருந்தது. விழுப்புரம் மாவட்டம் 85.85 விழுக்காடு தேர்ச்சியுடன் 32ஆவது இடம் பிடித்திருந்தது.
இதையடுத்து அண்மையில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை குறிப்பிட்டு, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் சமூக ஆர்வலர் ஜோதி ஜாஷ்வா ராஜன் என்பவர் பேனர் ஒன்று வைத்துள்ளார்.
அந்த பேனரில், 'விழுப்புரம் மாவட்டத்தை கல்வியில் தொடர்ந்து கடைசி இடம் கிடைக்க உதவிபுரிந்து அரசு சலுகையாக போராடிய ஆசிரியப் பெருமக்களுக்கும், கல்வித்துறை அலுவலர் மற்றும் அரசு அலுவலர்களுக்கும் நன்றி நன்றி நன்றி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.