விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுக்கோட்டைச் சுற்றுப் பயணத்தின்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்பட்டது.
மேலும் இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்பியை செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தடுத்து நிறுத்தி சமரசம் பேசியதாகத் தெரிகிறது. இதனால் பாலியல் தொல்லை அளித்த முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் புகாரைக் கொடுப்பதைத் தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (பிப்.10) நடைபெற்ற விசாரணையின்போது முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்பியும் ஆஜராகவில்லை. மேலும் இதற்கான காரணத்தை அவர்களது வழக்குறிஞா்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அதேநேரம் அரசுத் தரப்பில், சாட்சிகளாகச் சென்னை சைபா் கிரைம் கூடுதல் எஸ்பி ஷாஜிதா மற்றும் விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர். அப்போது எதிர்த்தரப்பு வழக்குறிஞா்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அரசுத் தரப்பு சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி புஷ்பராணி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையைப் பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிந்துவிட்டதால், சிபிசிஐடி காவல் துறையினரிடம் விசாரணை தொடங்கி உள்ளது.
இதனால் தற்போது வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. எனவே இன்னும் சில நாட்களில் வழக்கு விசாரணை முழுவதுமாக முடிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு.. உதவி விசாரணை அதிகாரி சாட்சியம்!