விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள வசந்த கிருஷ்ணாபுரம் பகுதியில் சமூக விரோதிகள் சிலர், சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட மதுவிலக்கு காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையிலான காவலர்கள், அந்தப் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு பேரல்களில் 800 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டவிரோதமாக காய்ச்சி வைத்திருந்த எரிசாராயத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றை உடனடியாக கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.