விழுப்புரம் மாவட்டம் இளங்காடு ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(41). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடி லத்தேரி கரிமங்கலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அதே பள்ளியில் பணியாற்றிய ஆனந்தி என்பவருடன் பிரபுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் பிரபு அடிக்கடி ஆனந்தி வீட்டிற்கு சென்றதோடு மட்டுமல்லாது, ஆனந்தியின் 17 வயது மகள் தேவியுடனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழகியுள்ளார்.
நாளடைவில் தேவியை காதல் செய்வதாக கூறி பிரபு அடிக்கடி அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15.05.2016 அன்று சந்தைக்குச் சென்று தனது அம்மாவை அழைத்து வருவதற்காக தேவி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பிரபு அவரை வழிமறித்து தன்னை திருமணம் செய்துகொண்டு உடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த தேவியை வலுக்கட்டாயமாக பாண்டிச்சேரிக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் தேவியை பிரபு திருமணமும் செய்துள்ளார். அப்பகுதியில் தங்கி தேவிக்கு பிரபு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவியின் பெற்றோர்கள் அங்கு சென்று இளம்பெண்ணை மீட்டதுடன் சம்பவம் தொடர்பாக லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த 2014 ஜூலை 14ஆம் தேதி பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி எம்.செல்வம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, குற்றவாளி பிரபுவுக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 366ன் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து போலீசார் பிரபுவை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.