வேலூர்: அடுக்கம்பாறை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆற்காட்டன் குடிசை, மூஞ்சூர்பட்டு, அடுக்கம்பாறை, சாத்துமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென கிராம மக்கள் நிதி திரட்டி சுமார் ரூ.2 லட்சத்தை அரசுக்கு செலுத்தியதாகவும், ஆனால் 12 ஆண்டுகளாகியும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தாமல் உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பள்ளியின் முன்பாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலையில் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வட்டாட்சியர், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையும் படிங்க:முறைகேடு: 'கடும் நடவடிக்கை எடுக்காதீங்க' என்ற எஸ்.பி.வேலுமணி தரப்பின் கோரிக்கை நிராகரிப்பு!