வேலூர் மாவட்டம் அணைக்கட்டுப் பகுதியில் நேற்று அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அத்தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமாருக்கும் அமைச்சர் கே.சி. வீரமணிக்கும் இடையே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியில், நந்தகுமார் பேசும்போது, தனது தொகுதியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டுமென்றே மறுக்கப்படுவதாகவும், குறிப்பாக குறிப்பிட்ட ஒரு பெண்ணிற்கு கைம்பெண் உதவித்தொகை வழங்காமல் அலுவலர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரமணி பதில் கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அமைச்சருக்கும் நந்தகுமாருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் மேடையில் ஏறி கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த சூழலில், அரசு விழாவில் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன், என்பது குறித்து திமுக எம்எல்ஏ நந்தகுமார், நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் பேசும்போது, ”வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். முன்னதாக, எனது தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கைம்பெண் உதவித்தொகை வழங்க வட்டாட்சியரிடம் கேட்டிருந்தேன். அவரும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால் இன்று வரை அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.
எனவே நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, அந்தப் பெண்ணிற்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்; இல்லாவிட்டால் மேடையில் வைத்து கேட்பேன் என்று கூறிவிட்டுதான் நிகழ்ச்சிக்குச் சென்றேன். ஆனால், நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணிற்கு உதவித்தொகையை வழங்கவில்லை என்று எனக்கு தெரிய வந்தது. எனவே அந்தப் பெண்ணை மேடையில் ஏற்றி அமைச்சரிடம் இது குறித்து விளக்கம் கேட்டேன்.
பெரிய நிகழ்ச்சியில் வைத்து இதைக் கேட்டதால், அவர்களுக்கு வருத்தம் இருந்திருக்கும். அந்த வருத்தம் நியாயமானதுதான். ஆனால் அமைச்சர் உரிய முறையில் அந்தப் பெண்ணிற்கு உறுதி அளித்திருந்தால், நிகழ்ச்சி முடிந்திருக்கும்; நானும் என் வேலையை பார்த்துவிட்டுச் சென்றிருப்பேன். அதை விட்டுவிட்டு சிவப்பு சேலை அணிந்து இருந்ததால், அந்தப் பெண் திமுககாரர் என்று அமைச்சர் பேசுகிறார். நான் கேட்கிறேன் கணவனை இழந்த ஏழைப்பெண் திமுககாரர் என்றால், அவருக்கு உதவித்தொகையைக் கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா.
நான் பேசும்போது, மைக்கை அணைக்க வந்தார்கள். விளம்பரத்திற்காக நான் பேசுவதாக அமைச்சர் கூறினார். யாருக்குத் தேவைப்படுகிறது விளம்பரம், ஏற்கனவே சொல்லிவிட்டுதான் நிகழ்ச்சிக்கு வந்தேன். பிரச்னை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வரவில்லை. மேடை நாகரிகம் பற்றி அமைச்சர் பேசுகிறார், நான் அவரைப் பற்றி ஏதாவது தாக்கி பேசினேனா.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள் எனது தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அப்படியிருக்கையில் நான் ஏன் விளம்பரம் தேட வேண்டும். தனிப்பட்ட முறையில், அமைச்சருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது உள்ளாட்சித் தேர்தல் வருவதால்தான், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அமைச்சர்கள் கண்டிப்பாக திமுக தொகுதிகளை புறக்கணிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
நான் மனிதாபிமானமுள்ள அமைச்சரைப் பார்த்துக் கேட்கிறேன், இவ்வளவு பிரச்னை முடிந்த பிறகாவது அந்தப் பெண்ணிற்கு உதவித்தொகையை கொடுத்தார்களா? “ என்ற பல கேள்விகளோடு பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: அரசு விழாவில் அமைச்சர் - திமுக எம்எல்ஏ மோதல்: அடிதடியில் முடிந்த குறைதீர் கூட்டம்!