வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வேலூர் மாவட்டத்தில் டோல்கேட், காட்பாடி, காகிதப்பட்டறை மற்றும் குடியாத்தம் ஆகிய இடங்களில் மொத்தம் நான்கு உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
இந்தச் சந்தைகளில் மொத்தம் 2,828 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நான்கு உழவர் சந்தைகளில் தினமும் சராசரியாக 350 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறுகின்றனர்.
இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 28 லட்சம் மதிப்பில் 80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது அங்கு வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அவர்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் உழவர் சந்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
ஆகவே விவசாயிகள் விதை சான்று, அங்கச் சான்று துறையில் பதிவு செய்து உரிய சான்றிதழ் பெற்று தங்கள் விளைவித்த இயற்கை காய்கறிகள், பழங்களை உழவர் சந்தைகளில் விற்பனை செய்து பயன்பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...இயற்கை விவசாயம்: கம்பு சாகுபடியில் அசத்தும் பெரம்பலூர் இளைஞர்