வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனம் தொடர்ந்து திருடப்பட்டு வந்தது. இன்று காலை அம்பூர் பேட்டை பழைய மசூதி தெருவில் சமீர் என்பவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை இரண்டு கொள்ளையர்கள் திருடிச்செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
இதைத்தொடர்ந்து, இந்த செய்தி குறித்தும், அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், வாகனத்தை திருடிவிட்டு எதுவுமே நடக்காதது போல் வாணியம்பாடி ஜின்னா சாலை அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த கொள்ளையர்களை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டனர். பின்னர், அவர்களை கையும் களவுமாகப் பிடித்து கட்டி வைத்து உதைத்து, காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர்கள் தொடர்ந்து இருசக்கர வாகனங்களைத் திருடி வந்தது தெரியவந்ததுள்ளது.